ஓவியம்: வெங்கி ஜிம்முக்குப் போகிறவர்கள், உடலை வலுப்படுத்த நினைப்பவர்கள் உடல் வலிமைக்குத் தினமும் புரோட்டீன் (புரதம்) பவுடர் உட்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா? இன்றைய நாகரிகச் சூழலில் இயற்கை உணவில் கிடைக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது எனும் நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறு. புரதச் சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது; செல்களின் தேய்மானத்தைக் குறைத்துப் புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன் (இயக்குநீர்), வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகப் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை. நமக்குத் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவிலிருந்தே பெறலாம். சைவம் சாப்பிடு பவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர...